உலக அதிசய கேலிக்கூத்து

July 8, 2007 on 8:24 pm | In பொது | 1 Comment

உலக அதிசயங்களுக்கான புதிய பட்டியல் தேர்வு என்ற பெயரில் பல ஆண்டுகளாக பல சுற்றுகளாக நடைபெற்று வந்த கேலிக்கூத்துக்கள் ஒருவழியாக நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. கெடு தேதி நெருங்க நெருங்க ஓயாத எஸ்.எம்.எஸ், தொடர்ச்சியாக பலராலும் அனுப்பப்பட்ட ஒரே ஈமெயில் என்று தாஜ்மஹாலுக்கு ஓட்டுப் போட சொல்லி படுத்தி விட்டார்கள். இதில் தேசபக்தியைக் காட்டுகிறேன் பேர்வழி என்று ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட நம்ம பிரபலங்கள் அடித்த விளம்பர ஸ்டண்ட்கள் தனி.

இவர்கள் யாருமே சிந்தித்துப் பார்க்கத் தவறிய ஒரு விசயம் மெஜாரிட்டி ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுக்க இது ஒன்றும் கவுன்சிலர் எலக்சன் இல்லை என்பதை. ஒரு வாதத்திற்கு குறைவான மக்கள் வாழும் ஒரு நாட்டில் உன்னதமான கட்டிடம் ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை புறந்தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியர்களும், சீனர்களும் சேர்ந்து அவரவர் நாட்டில் அதைவிட பெருமை குறைந்த ஒரு கட்டிடத்தை உலக அதிசயமாக்கி விட முடியுமே?

உலக அதிசய தேர்வு என்பது அதன் கட்டிடக்கலை, கலாச்சார தொன்மை, தனித்தன்மை(uniqueness) ஆகியவற்றைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். அதையும் ஐ.நா.சபையின் UNESCO போன்ற கலாச்சார அமைப்புகள் நிபுணர்களைக் கொண்டு செய்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் நடத்தியது யார்? Bernard werber என்கிற சுவிஸ் தொழிலதிபர் ஒருவரால் உருவாக்கப்பட்ட NOWC என்னும் ஒரு தனியார் அமைப்பு. அதற்கு UNESCO போன்ற எந்த கலாச்சார அமைப்பின் பின்புலமும் இல்லை (பார்க்க: UNESCO வின் அறிவிப்பு ).

அவர்களின் விதிமுறைகளே வேடிக்கையானவை. உலக அதிசயப் பட்டியலுக்கான பரிந்துரைக்கு யார் வேண்டுமானாலும் எந்த கட்டிடத்தை வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஒருவரே எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம். இண்டர்நெட்டில் மட்டுமல்ல எஸ்.எம்.எஸ் மூலமும், டெலிபோன் மூலமும் கூட ஓட்டுப் போடலாம். இவற்றிற்கெல்லாம் கட்டணம் உண்டு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது “FOR PROFIT CORPORATION” என்பதையும் அவர்களே தெளிவாக அறிவித்து விட்டபடியால் கேள்வி எழுப்பவும் ஒன்றுமில்லை. ஆக மொத்தம் ஏற்பாட்டின் நோக்கமே பணம் பண்ணுவதுதான் என்பது தெள்ளத் தெளிவு.

இண்டர்நெட்டின் வழக்கமான opinion poll களில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர இதற்கு மேலதிக முக்கியத்துவம் தந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் இதற்கான பிரச்சாரத்தில் தேசபக்தியை கலந்து விட்டதில் நியாயமான கேள்விகள் காணாமல் போய்விட்டன. இதில் நம் மீடியாக்களின் பங்கும் கணிசமானது. ஒன்று ஆதரவு அளித்தன அல்லது கண்டும் காணாமல் இருந்து கொண்டன. அதிலும் தினமலர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கென தனிப் பக்கமே உருவாக்கி சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டது. அரசாங்க செலவிலேயே கோவிலில் திருவிழாக் கொண்டாட்டம் போல ஓட்டு வைபவம் நடந்தது இதன் உச்சக்கட்ட தமாஷ்.

இப்படியே ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டின் பிரதிநித்துவ கட்டிடத்தை முன்னிறுத்த முழு ஆதரவு அளித்திருக்கும் பட்சத்தில் கட்டண ஓட்டுக்கள் மூலம் மட்டும் இந்நிறுவனத்திற்கு பல கோடிகள் கொட்டியிருக்கும். குறிப்பாக இந்தியாவிலிருந்துதான் அதிக ஓட்டுக்கள் விழுந்ததாக சொல்கிறார்கள். (எந்தெந்த இடத்துக்கு எத்தனை ஓட்டுக்கள் விழுந்தன என்பது குறித்து எந்த விவரமும் அந்த வெப்சைட்டில் இல்லை). இதை பற்றியெல்லாம் யாருக்கு என்ன கவலை?

இதோ அடுத்த கட்டமாக அதே நிறுவனம் NEW 7 WONDERS OF NATURE என்ற பெயரில் இயற்கையாக அமைந்த இடங்களுக்கான உலக அதிய பட்டியல் தேர்வை தொடங்கிவிட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த ஒரு இடம் நிச்சயம் இடம்பெறும். தராதரம் பற்றிய சிந்தனையின்றி இன்று ஓய்ந்திருக்கும் கேலிக்கூத்துக்கள் மீண்டும் களைகட்டும். மாறி நடந்தால் அதுதான் உலக அதிசயம்.

இழப்பு இசைக்கே

June 4, 2007 on 4:00 am | In இசை | 3 Comments

தமிழ் திரையிசையில் எம்.எஸ்.வி-கண்ணதாசன் கூட்டணிக்குப் பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற கூட்டணி இளையராஜா-வைரமுத்து என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. 1980-ல் தொடங்கி ஏழு வருடங்கள் இருவரும் நடத்திய இசை ராஜ்ஜியம் அலாதியானது. ஆனால் எம்.எஸ்.வி-கண்ணதாசன் போல இருவரும் இறுதி காலம் வரை இணை பிரியா ஜோடியாக இருக்க இயலாமல் போனது உள்ளபடியே திரையிசைக்கு பெரும் இழப்புத்தான். பிரிவுக்கு காரணமென்ன என்பது பற்றி வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட போதெல்லாம் அவர் ‘இதை யாராவது இதுவரை இளையராஜாவிடம் கேட்டிருக்கிறீர்களா’ என்றே கேட்பார். அதற்கு மேல் வெளிப்படையாக அவர் பேசியதில்லை.

எனினும் இது குறித்து 1987 இல் ஜூ.விக்கு அவர் அளித்த விரிவான பேட்டியை படிக்க நேர்ந்தது. தன்னை ஆரம்ப காலத்தில் ‘இவர் அஞ்சாறு கண்ணதாசனுக்கு சமம்’ என்று உயர்த்தி பேசிய இளையராஜா, பின்னர் ‘இப்பவெல்லாம் என்ன பாட்டு எழுதறாங்க.. கண்ணதாசன் கண்ணதாசன்தான்’ என்று பிறர் முன்னால் விமர்சித்ததாகவும், இரண்டுமே தேவையில்லாதது என்கிறார். தன்னுடைய பாடல் வரிகளை இளையராஜா தன்னிஷ்டத்துக்கு திருத்தி அமைத்துக் கொண்டதையும் அதற்கு தான் தெரிவித்த எதிர்ப்புகளும், விவாதங்களும் இளையராஜவின் மனதில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாகவும், பிற இசையமைப்பாளர்களுக்கு தான் பாடல் எழுதச் சென்றதையும், அதனால் ஏற்பட்ட தாமதங்களையும் அவர் அவமதிப்பாக எடுத்துக்கொண்டார் என்றும் அப்பேட்டியில் விளக்குகிறார்.

ஆக மொத்தம் அனைத்துக்கும் காரணம் இருவருக்கும் இடையேயான ஈகோதான் என்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. இதே ஈகோதான் பாரதிராஜாவையும் பிரித்திருக்கக்கூடும். சில வருடங்கள் முன்பு நடைபெற்ற இளையராஜாவின் மேடைக்கச்சேரி ஒன்றில் கூட ‘இவன் கர்வம் பிடித்தவன்; ஆனால் வித்தக கர்வம்’ என்று அவர் வெளிப்படையாக விமர்சித்தார். பாரதிராஜாவுடனான வேறுபாடுகள் அகன்று விட்டதாகவே தெரிகிறது. இப்போதெல்லாம் இருவரும் இருவரின் விஷேஷ காரியங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். மற்றும், தனது கனவுப் படம் என்று பாரதிராஜா கூறிக்கொள்ளும் குற்ற பரம்பரை படத்திலும் சேர்ந்து பணிபுரிய இருக்கிறார்கள். மாறாக, வைரமுத்துவுடன் உண்டான இடைவெளி நிலைத்து விட்டது.

வைரமுத்து 90 களில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் அவை கால வரையறைக்குட்பட்ட வெற்றியாகவே அமைந்தன.(எனினும்,வைரமுத்து பெற்ற 5 தேசிய விருதுகளில் 4 ரஹ்மான் இசையிலேயே கிடைத்தது). இன்று வரை ஆத்ம திருப்தியான இசையும், அதை முழுமை செய்யும் கவித்துவமான வரிகளும் அவர் இளையராஜாவுடன் இருந்தபோதே சாத்தியப்பட்டது. ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலின் காதலாகட்டும், ‘பூங்காற்று திரும்புமா’ ஏக்கமாகட்டும், சிந்து பைரவியின் சாஸ்திரிய சங்கீதமாகட்டும்.. இசையும், பாடலும் தத்தம் அழகுணர்ச்சி குன்றாமல் ஒன்றை ஒன்று சுவீகரித்துக் கொள்கின்றன.

‘இளையராஜாவை பிரிந்து வந்ததால் என் பாடல்களுக்கு நேர்ந்த நஷ்டத்தை நான் உணர்கிறேன். ஆனால், அவர் இசைக்கு நேர்ந்த நஷ்டத்தை அவர் உணரவில்லை’ என்றும் வைரமுத்து அங்கலாய்க்கிறார். ஆனால் இவர்கள் இருவரையும் விட அதிக நஷ்டத்துக்குள்ளானது தமிழ் திரையிசையும், அதன் அத்தியந்த ரசிகர்களும் என்பதைத்தான் இருவருமே உணரவில்லை!

சோதனைப் பதிவு

June 3, 2007 on 7:48 am | In சுயம் | No Comments

முகுந்த் உருவாக்கி வரும் இந்த tamilblogs தளத்தை சோதித்துக் கொண்டிருக்கிறேன். Firefox இல் எழுத்துக்கள் கொம்பு உடைகின்றன. அதை சரி செய்து விட்டால் வேறு பெரிய திருத்தம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.

Powered by WordPress with Pool theme design by Borja Fernandez. Packaged by Edublogs - education blogs.
Entries and comments feeds. Valid XHTML and CSS. ^Top^